மீண்டும் பதிக்கப்பட்ட வரலாற்று முத்தம்

» Download This File

”காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர் போர் எண்ணுவாரோ?”

என்று பாடினான் மகாகவி. உலகெங்கிலும் போர்க்குணத்தின் தாக்கத்தைக் குறைத்து, மானுட வாழ்வியலின் அழகையும், மென்மையையும் எடுத்துரைக்கும் ஓர் அலாதியான மொழிதான் காதல்.

வீரத்தின் விளைச்சலே காதல் என்பர் ஒரு சாரார். முற்றிலும் உண்மை. ஆனால் வீரம் என்பது வெறும் போர்த்தொழில் புரிவது மட்டுமல்ல. வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை என்பது நாமறிந்ததே.

உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் 2.5 விழுக்காட்டினைக் கொள்ளை வாங்கிய கொடூர வரலாறுதான் இரண்டாம் உலகப் போர். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி போரில் தோல்வியுற்று, ஜப்பான் சரணடைந்ததாகவும், போர் முடிவுற்றதாகவும் அமெரிக்காவின் ‘டைம்ஸ் ஸ்கொயர்’ பகுதியில் வானொலியில் அறிவிக்கப்பட்டது.

அன்று அச்செய்தி அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்னரே நாடு திரும்பியிருந்தார், ‘ஜார்ஜ் மெண்டோஸா’ என்கிற அந்த மாலுமி. எதிரிலே நடந்து வந்து கொண்டிருந்தார் செவிலியரான ‘க்ரேடா ஜிம்மர்’. இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களில்லை. ஆனால் இந்த அறிவிப்பைக்கேட்டவுடன் மகிழ்ச்சி தாளாமல், எதிரில் வந்த க்ரேடாவை அள்ளி அணைத்து இதழில் இதழ் பதிக்கிறார் மெண்டோஸா. அந்த மகிழ்ச்சியைப் பரிமாறும் விதமாக அதை ஏற்றுக்கொள்கிறார் க்ரேடா. தற்செயலாக அதைத் தன் புகைப்படக் கருவியில் பதிவு செய்கிறார், ‘ஆல்ஃப்ரெல் எய்ஸென்ஸ்டெய்ட்’ என்னும் புகைப்படக் கலைஞர்.

‘த டைம்ஸ் ஸ்கொயர் கிஸ்’ என்று வரலாற்றின் பக்கங்களில் பதிந்த அந்த முத்தம், மானுடம் போரை நிறுத்தி, காதலைக் கொண்டாடத் துவங்கிய மனப்போக்கின் சாட்சி.

» Download This File

இந்நிலையில் ஜப்பான், சீனாவிடம் சரணடைந்த நாளைக் கொண்டாடும் முகமாக, சீனாவிலுள்ள ஷாங்காயில், கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, 70 ஜோடிகள் அந்த வரலாற்று முத்தத்தினை மறுபதிவு செய்துள்ளனர்.

‘டைம்ஸ் ஸ்கொயர்’ முத்தத்தைப் போலவே மாலுமி உடை அணிந்து ஆண்களும், செவிலியர் உடையில் பெண்களும், இணையராக முத்தமிட்டு வரலாற்றினை நினைவுபடுத்திக் கொண்டாடியுள்ளனர்.

பேரழிவுகளை உண்டாக்கும் போர் சக்திகளை வென்று நிற்கும் மாபெரும் இயற்கை ஆற்றலாகக் காதல் விளங்குகிறது என்பதற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

worldwar1_vc1

» Download This File