இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரியவில்லை: சூர்யா

இன்றைய நாட்களில் குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரியவில்லை: சூர்யா
‘பசங்க–2’ படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அமலாபால், பிந்துமாதவி, வித்யா, குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் சூர்யா பேசும்போது,”பசங்க–2″ படத்தை தயாரித்து நடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதில் நடித்துள்ள குழந்தைகளும் மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பலமுறை பாண்டிராஜ் சொன்ன பிறகு படமாக்க முடிவு செய்தோம். இது குழந்தைகளை வைத்து எடுத்துள்ள அருமையான படம். இந்த காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பது பெற்றோருக்கு தெரியாத விஷயமாக இருக்கிறது. இந்த படம் அதுபற்றி தெளிவாக சொல்கிறது.

இந்த படத்தில் நான் மிகவும் ஒன்றி நடித்தேன். குறிப்பிட்ட நாட்களை விட அதிக நாள் கால்ஷீட் கொடுத்தேன். இந்த படத்தை சிறப்பாக எடுத்துக்கொடுத்த பாண்டிராஜுக்கும் உழைத்து அனைவருக்கும் நன்றி’ என்றார்.

கார்த்தி பேசுகையில், ‘குழந்தைகளை மையமாக வைத்து உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்’ என்று கூறினார்.

அமலாபால் பேசும்போது, ‘இந்த படத்தில் என்னை நடிக்கும்படி பாண்டிராஜ் கேட்டபோது, என் கணவர் இயக்குனர் விஜய் அதை ஏற்க யோசித்தார். கதை எனக்கு பிடித்திருந்தது. குழந்தைகள் படம் என்பதால் நடித்தேன்’ என்றார்.

இயக்குனர் பாண்டிராஜ் பேசும்போது, “இவ்வளவு நாள் நான் இயக்கிய படங்கள் ஆவின்பால் என்றால் இந்த படம் தாய் பால். நான் இதில் சொல்லும் நல்ல விஷயங்கள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே சூர்யாவை இதில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் அதை நிறைவேற்றி இருக்கிறார்” என்று கூறினார்.