சண்டி வீரன் – திரை விமர்சனம்

Movie: [usr=3.0 size=20]
நடிகர் : அதர்வா
நடிகை :ஆனந்தி
இயக்குனர் :சற்குணம்
இசை :எஸ்.என்.அருணகிரி
ஓளிப்பதிவு :பி.ஜி.முத்தையா
மன்னார்குடி அருகே உள்ள நெடுங்காடு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் போஸ் வெங்கட். இவருடைய மகன் அதர்வா. நெடுங்காடு கிராமத்திற்கும் அருகே உள்ள வயல்பாடி கிராமத்திற்கும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது. நெடுங்காடு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவரான ரவிச்சந்திரனும், கவுன்சிலராக இருக்கும் லாலும் வயல்பாடி கிராமத்திற்கு தண்ணீர் விடாமல் இருக்கிறார்கள்.இந்த கிராமத்தின் தண்ணீர் பிரச்சனை கலவரமாக வெடிக்கிறது. இதில் போஸ் வெங்கட் இறக்கிறார். வளர்ந்து ஆளான அதர்வா சிங்கப்பூர் சென்று ஊர் திரும்புகிறார். அப்போது லாலின் மகளான ஆனந்தியை காதலிக்கிறார். இவர்களின் காதல் விவகாரம் லாலுக்கு தெரிய வர, உடனே அதர்வாவை கூப்பிட்டு மிரட்டுகிறார். ஆனால் அதர்வாவோ ஆனந்தியைதான் திருமணம் செய்வேன் என்று சபதம் போட்டு செல்கிறார்.

இந்நிலையில் தன்னுடன் சிங்கப்பூரில் வேலை பார்த்த நண்பனை சந்திக்க வயல்பாடி கிராமத்திற்கு செல்கிறார். அங்கு உப்புத் தண்ணியை குடித்து வரும் ஊர் மக்களை பார்த்து அதிர்ச்சியாகிறார். இந்த ஊருக்கு தண்ணீர் கிடைக்க திட்டமிடுகிறார். எப்படியாவது தண்ணீரை பக்கத்து ஊருக்கு பெற்றுத் தர நினைக்கிறார்.

இந்த விஷயமும் லாலுக்கு தெரிய வருகிறது. இந்த பிரச்சனையில் மீண்டும் கலவரம் வெடிக்கிறது. இதில் அதர்வாவை பழி தீர்க்க நினைக்கிறார் லால். அதர்வா லாலை சமாளித்து ஆனந்தியை கைப்பிடித்தாரா? தண்ணீரை பக்கத்து ஊருக்கு கொடுத்து உதவினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து நாயகனாக மனதில் பதிகிறார். சண்டை காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.

நாயகி ஆனந்தி, பாவாடை தாவணியுடன் வந்து கிராமத்து பெண்ணிற்கான வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். குறும்பும் துடிப்பும் இவரது ப்ளஸ் பாய்ண்ட். கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.

ஆனந்திக்கு அப்பாவாக நடித்திருக்கும் லால், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். ஆனந்திக்கு பாசமுள்ள அப்பாவாகவும் மனதில் பதிந்திருக்கிறார். வில்லத்தனத்தில் இன்னும் பல படங்களில் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அதர்வாவின் அப்பா போஸ் வெங்கட், அம்மா ராஜஸ்ரீ மற்றும் ஊர் தலைவர்கள், ஊர் மக்கள், நண்பர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

தண்ணீர் பிரச்சனையை கதைக்களமாக எடுத்து களமிறங்கியிருக்கிறார் சற்குணம். சொல்ல வந்த கதையை சாட் அண்ட் ஸ்வீட்டாக சொல்லியிருக்கிறார். சிறந்த கதாபாத்திரங்கள் தேர்வு, தெளிவான திரைக்கதை என அனைத்திலும் வெற்றிக் கண்டிருக்கிறார். வன்முறைகளை ஆபாசம் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

அருணகிரி இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகம். சபேஷ் முரளியின் பின்னணி இசை படத்திற்கு நன்றாக கை கொடுத்துள்ளது. பி.ஜி. முத்தையா தனது ஒளிப்பதிவில் கிராமத்து அழகை விருந்தாக படைத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘சண்டி வீரன்’ மாவீரன்.