அபார பீல்டிங், நேர்த்தியான பந்து வீச்சால் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி | Fielding remarkable, elegant bowling Chennai victory by 2 runs

அபார பீல்டிங், நேர்த்தியான பந்து வீச்சால் 2 ரன் வித்தியாசத்தில் சென்னை வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் போட்டியில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் காம்பீர் பீல்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி கொல்கத்தாவின் அபார பந்து வீச்சுக்கு எதிராக ரன் எடுக்க திணறினார்கள். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தாவின் காம்பீர், உத்தப்பா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஈஸ்வர் பாண்டே வீசினார். முதல் பந்தில் உத்தப்பா ஒரு ரன் எடுக்க 2-வது பந்தில் காம்பீர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அடுத்து உத்தப்பாவுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தின் 3-வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து உத்தப்பா அசத்தினார். மோகித் சர்மா வீசிய 4-வது ஓவரில் உத்தப்பா ஹாட்ரிட் பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷி படுத்தினார். உத்தப்பா அதிரடியால் கொல்கத்தா 5 ஓவரில் 52 ரன்கள் எடுத்தது.

6-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே உத்தப்பா அவுட் ஆனார். உத்தப்பா 17 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 39 ரன்கள் குவித்தார்.

உத்தப்பா அவுட் ஆன பிறகு சென்னை அணியினர் உஷார் ஆகினர். பந்துக்கு பந்து ரன் விட்டுக்கொடுக்காமல் அபாரமாக பீல்டிங் செய்தார்கள். குறிப்பாக மெக்கல்லம் பீல்டிங்கில் அனல் பறந்தது.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சூர்ய குமார் யாதவ் களம் இறங்கினார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தில் பாண்டே அவுட் ஆனார். அவர் 20 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு சூர்ய குமார் யாதவ் உடன் யூசுப் பதான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. 13-வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சூர்ய குமார் அவுட் ஆனார். இவரது கேட்சை பிராவோ அபாரமாக பிடித்தார். யாதவ் 26 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

அடுத்து 5-வது விக்கெட்டுக்கு பதான் உடன் டென் டோயிஸ்சே ஜோடி சேர்ந்தார். கொல்கத்தா 15 ஓவர் முடிவில் 90 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றி பெற 30 பந்தில் 45 ரன்கள் தேவைப்பட்டது.

16-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பதான் கிளீன் போல்டானார். அடுத்து ரஸல் களம் இறங்கினார்.

17-வது ஓவரை நெக்ரா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் ரஸல் 4 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அடுத்து கம்மின்ஸ் களம் இறங்கினார். இந்த ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 101 ரன்னைக் கடந்தது.

18-வது ஓவரை பிராவோ வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கம்மின்ஸ் அவுட் ஆனார். 8-வது விக்கெட்டுக்கு டென் டோயிஸ்சே உடன் பியூஸ் சாவ்லா ஜோடி சேர்ந்தார். 5-வது பந்தில் சாவ்லா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். 9-வது விக்கெட்டுக்கு உமேஷ் யாதவ் களம் இறங்கினார்.

கொல்கத்தா அணி வெற்றிக்கு 12 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை நெக்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டென் டோயிஸ்சே 3-வது பந்தை சிக்சருக்கு விளாசினார். 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5-வது பந்தில் உமேஷ் யாதவ் கிளீன் போல்டானார். கடைசி விக்கெட்டாக பிராட் ஹாக் களம் இறங்கினார். கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டது.

இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை பிராவோ வீசினார். முதல் மூன்று பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. 4-வது பந்தை சிக்சருக்கு விளாசினார் டென் டோயிஸ்சே. அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். இதனால் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சென்னை அணி 2 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணி தரப்பில் பிராவோ 3 விக்கெட்டும், அஸ்வின் இரண்டு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.