அசினை தொடரும் சோகம்

அசினை தொடரும் சோகம்

‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அசின் ‘கஜினி’யில் நடித்து மிகப்பெரிய நடிகை ஆனார். இந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்காக மும்பை சென்ற அவர் பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்தார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த இந்தி படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை வெற்றன. பின்னர் வெளியான படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அசின், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஆல் இஸ் வெல்’ படத்தில் அபிஷேக்பச்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

இதற்கிடையே மைக்ரோமேக்ஸ் அதிபர் ராகுல்சர்மாவை அசின் காதலித்து கைபிடிக்கும் செய்தி வெளியானது. நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஆல் இஸ்வெல்’ படத்துக்குப் பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க அசின் ஒப்பந்தம் ஆகவில்லை.

திருமணத்துக்கு முன்பு அவர் நடிக்கும் கடைசி படமாக இது அமைந்துள்ளது. அபிஷேக் பச்சனுடன் ஜோடி சேர்ந்த இந்த படம் அமோக வெற்றி பெறும். அந்த மகிழ்ச்சியுடன் சினிமா உலகத்துக்கு விடை கொடுத்து விட்டு இல்லற வாழ்க்கையில் இறங்கலாம் என்று அசின் நினைத்து இருந்தார்.

ஆனால் ‘ஆல் இஸ் வெல்’ அவர் எதிர்பார்த்தபடி வெற்றிப்படமாக அமையவில்லை. கதை சரியில்லை. காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை. படத்தை சொதப்பி விட்டார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது ‘ஹிட்’ படமாக அமையவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அசின் சோகத்தில் மூழ்கி இருக்கிறார் என்று மும்பை திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.