தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அருண் விஜய்

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் அருண் விஜய்

தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலர் தயாரிப்பாளராக மாறி வருகின்றனர். சூர்யா ‘2டி’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். அதுபோல், விஷால் ‘விஷால் பிலிம் பேக்டரி’, தனுஷ் ‘உண்டர்பார்’, விஜய் சேதுபதி ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’, ஆகியவை மூலம் படம் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் பிரபு தேவாவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

அந்த வரிசையில் தற்போது அருண் விஜய்யும் இணைந்திருக்கிறார். இவர் ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார். இதன் மூலம் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், திறமையிருந்தும் சாதிக்க வாய்ப்பிலாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சினிமா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கவுதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கு ரீஎன்ட்ரியாக அமைந்தது. தற்போது கவுதம் மேனன் சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தவுடன் கவுதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தவிர தெலுங்கில் ராம்சரண் தேஜா மற்றும் கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் நடிக்கும் படங்களிலும் முக்கிய கேரக்டரில் அருண்விஜய் நடித்து வருகிறார்.