சர்ச்சை கதையில் நடித்தது ஏன்?: நித்யாமேனன் விளக்கம்|Nithya description appearing in the story

நித்யாமேனன் நாயகியாக நடித்த ‘ஓ காதல் கண்மணி’ படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் சர்ச்சை கதையம்சம் உள்ள படமாக இது வந்துள்ளது.

இந்த படத்தில் நடித்தது ஏன் என்பதற்கு நித்யாமேனன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

இயக்குனர் மணிரத்னம் கதை சொன்னபோது காதல், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, என பல விஷயங்கள் இருந்தது. அப்போதே கேரக்டரில் என்னை பொருத்தி பார்த்தேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம் என்று தோன்றியது. கதையும் மிகவும் பிடித்தது.

இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கும். அது சரியா, தவறா என்று யாரும் சொல்ல முடியாது. சமூகத்தில் பலமாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. முந்தைய காலங்களில் ஒருத்தரையொருத்தர் பார்க்காமலேயே திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடைசிவரை சேர்ந்தே வாழ்ந்தார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. விருப்பங்கள் மாறிக் கொண்டே இருக்கிறது. சினிமாவில் கேரக்டர் மற்றும் கதையை புரிந்து நடித்தால் காட்சி நன்றாக வரும். எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் அமைகின்றன. சிறு கேரக்டராக இருந்தாலும் எனக்கு பிடித்து இருந்தால் சம்மதிப்பேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன். சிறிய வேடமாக இருந்தாலும் வலுவானதாக இருந்தால் நடிப்பேன்.

இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.